ஏழு முக்கிய தோஷங்களை தீர்க்கும் அற்புத தலம் - விதி வழி விட்டால்தான் இந்தக் கோயிலைப் பார்க்க முடியும் - அருள்மிகு சோமநாதசுவாமி திருக்கோவில்

Guru

அருள்மிகு சௌந்தரநாயகி அம்பாள் சமேத சோமநாதசுவாமி திருக்கோவில்

Arulmigu Soundaranayagi Ambal Sametha Somanathaswamy Temple

வைப்புத்தளம் | பரிகாரத் தலம் | திருப்புகழ் பாடல் பெற்ற தலம் | பஞ்சநந்தி தலம்
🏛 அச்சுதமங்கலம் 📍திருவாரூர் மாவட்டம்
📜 தல வரலாறு & சிறப்புகள்
🔱
பிரதான மூலவர் / சிவன் அருள்மிகு சோமநாதேஸ்வரர்
🌸
தாயார் / அம்பாள் அருள்மிகு சௌந்தரநாயகி அம்பாள்
🌳
தல விருட்சம் (Sacred Tree) ருத்ராட்ச மரம்
💧
புனித தீர்த்தம் (Sacred Pond) காசி தீர்த்தம்

பரிகாரத் தலம்

இத்தலம் நீக்கும் தோஷங்கள்.

சந்திர தோஷம் காலசர்ப்ப தோஷம் கடன் மற்றும் நோய்கள் திருமணத் தடைகள் குழந்தை பாக்கியம் பேச்சுத் திறன் பிரிந்தவர் ஒன்று சேருதல்

ஆலய மகிமை மற்றும் முக்கிய சிறப்புகள்

மூலவர்: இத்தல மூலவர் சதுர பீட ஆவுடையைக் கொண்டவராகவும், நீல நிற ஜொலிப்புடன் கூடிய லிங்கமாகவும் காட்சியளிப்பது இத்தலத்தின் சிறப்பாகும்..

அம்பாளின் சிறப்புகள் & அற்புதங்கள்

அம்பாளின் தவக்கோலம்: கைலாயத்தில் சிவபெருமானின் கண்களை அம்பிகை மூடியதால், அவர் கோபமுற்று பூலோகம் சென்று தவம் செய்யக் கூறினார். அம்பிகை 'ருத்ராட்ச காடு' (ருத்ராண்யம்) பகுதியில் 12 ஆண்டுகள் ஒற்றைக்காலில் தவம் புரிந்து இறைவனை அடைந்தார். திருமேச்சூர் போல அம்பாளுக்கு கொலுசு அணிவிக்கும் பழக்கமுள்ளது.

அம்பாளின் பல்வேறு வடிவங்கள்: காலையில் மகிஷாசுரமர்த்தினியாகவும், மதியத்தில் மகாலட்சுமியாகவும், சாயரட்சையில் சரஸ்வதியாகவும், அர்த்தசாமத்தில் வெள்ளை வஸ்திரம் சாத்தப்பட்ட கர்ப்பிணி கோலத்திலும் காட்சி தருகிறார்.

அம்பாளின் அதிசயம்: சஷ்டி பஞ்சமி தினம் ஐந்தாம் நாள் இந்த அம்பாலுக்கு முத்து முத்தாக வேர்வை வியர்க்கும் அற்புதமான காட்சி இன்னும் நடந்து வருகிறது.

⛰️ கைலாயத்திற்கு இணையான தலம்

  • தேவேந்திரனால் நிறுவப்பட்டது: இங்குள்ள சிவலிங்கம், இந்திரலோகத்தின் அதிபதியான தேவேந்திரனாலேயே நிறுவப்பட்டு வழிபடப்பட்டதாகும்.
  • மகாவிஷ்ணு பூஜை செய்த தலம்: அச்சுதன் என்று அழைக்கப்படும் மகாவிஷ்ணுவே நேரடியாக சிவபெருமானைத் தொட்டு பூஜை செய்த சிறப்புடையது.
  • பஞ்சநந்தி தரிசனம்: ஆகாய நந்தி, பிரம்மநந்தி, விஷ்ணு நந்தி, அதிகாரி நந்தி, தர்மநந்தி ஆகிய ஐந்து நந்திகளைத் தாண்டி சிவபெருமானை தரிசிக்கும் அமைப்பு கொண்டது.
  • சிறப்பு விபூதி பிரசாதம்: இங்கு வழங்கப்படும் திருநீறு (விபூதி), நேரில் திருக்கைலாயத்தில் பெறப்படும் விபூதிக்குச் சமமானது.

துளசி அர்ச்சனை சிறப்பு

விசேஷ காலங்கள்: திங்கட்கிழமை, பிரதோஷம், மகாசிவராத்திரி இரண்டாம் நாள். குறிப்பிட்ட இந்த விசேஷ நாட்களில் மட்டும் சிவபெருமானுக்குத் துளசியைக் கொண்டு அர்ச்சனை செய்யப்படுகிறது. உலகத்திலேயே சிவபெருமானுக்குத் துளசியைச் சாத்தக்கூடிய ஒரே ஊர் இதுதான்; வேறு எங்குமே இந்த முறை கிடையாது.

பலன்கள்: 21 தலைமுறை சாபங்களை நிவர்த்தி செய்கிறது. உலகத்தை ஆளக்கூடிய சக்தியைக் கொடுக்கிறது.

மெய்சிலிர்க்க வைக்கும் நாகச்சட்டை & சந்திர ஒளி தரிசனம்

நாகச்சட்டை அற்புதம்: சமீபத்தில் இங்கே ஒரு சிலிர்க்க வைக்கும் அற்புதம் நிகழ்ந்துள்ளது! 24.12.2025 மார்கழி 9-ஆம் நாள் காலசந்தி பூஜையின் போது சிவலிங்கத்தின் மீது ஒரு நாகம் சட்டையை உரித்துச் சென்றிருக்கிறது! இந்த மெய்சிலிர்க்க வைக்கும் அதிசய நிகழ்வின் ஆதாரமாக, அந்த நாகச்சட்டையைக் கண்ணாடிச் சட்டமிட்டு (Frame) பக்தர்கள் பார்வைக்காகத் திருக்கோவிலில் வைத்திருக்கிறார்கள்.

சந்திர ஒளி தரிசனம்: ஆண்டுதோறும் பங்குனி பௌர்ணமி அன்று மாலை சாயரட்சை வேளையில், மூலவர் சோமநாதேஸ்வரர் மீது சந்திரனின் ஒளியானது நேராக வந்து விழும் அபூர்வ நிகழ்வு இத்தலத்தில் நடைபெறுகிறது.

கல்யாண சுந்தரர்: சுவாமி அம்பிகையின் கையைப் பிடித்து அக்னியை வலம் வரும் கோலத்தில் காட்சியளிப்பதால், திருமணத் தடைகள் நீங்கும்.

மகாலட்சுமி மற்றும் விஷ்ணு: அச்சுதன் (மகாவிஷ்ணு) இத்தல இறைவனை வழிபட்டதால் அச்சுதமங்கலம் எனப் பெயர் பெற்றது. இங்குள்ள மகாலட்சுமிக்கு சிவனைப் போல நெற்றிக்கண் இருப்பது தனிச்சிறப்பாகும்.

கோயில் அமைப்பு: 18 சித்தர்கள் வாசம் செய்வதாக நம்பப்படுவதால், ராஜகோபுரம் இரட்டைப்படை நிலைகளைக் கொண்டுள்ளது.

வைப்புத்தளம் மற்றும் பெரியபுராணம்

இத்தலமானது திருநாவுக்கரசர் (அப்பர்) பெருமானால் 'சோமேச்சரம்' என்னும் பெயரில் வைப்புத்தளமாகப் பாடப்பெற்றுள்ள பெருமை உடையது.

சேக்கிழார் பெருமான்: பெரியபுராணம் இயற்றிய சேக்கிழார் பெருமான் இத்தலத்தில் திருத்தொண்டுகள் பல ஆற்றியுள்ளதால், அவரைச் சிறப்பிக்கும் விதமாக சேக்கிழாருக்கும் தனித் திருவுருவச் சிலை வைத்து வழிபடப்படுகிறது.

திருப்புகழ் பாடல்: இக்கோவிலில் உள்ள பாலமுருகன் மீது அருணகிரிநாதர் அவர்களால் 'சோமேஸ்வர் கோவில் தனில் அமைந்த பெருமானே' எனத் திருப்புகழ் பாடல் பாடப்பட்டுள்ளது.

வரலாறு மற்றும் ஐதீகங்கள்

கோயில் கட்டமைப்பு: மூன்றாம் குளோத்துங்க சோழன் காலத்தில் அவரது ராஜகுருவான ஸ்ரீகண்ட சம்பு என்பவரால் இக்கோயில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஸ்ரீவாஞ்சியம் கோயிலைக் கட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட கற்கள் போக எஞ்சிய கற்களைக் கொண்டே இது கட்டப்பட்டதாகத் தகவலுண்டு.

சோமநாத ஆண்டார் சித்தர்: சோமநாத ஆண்டார் என்ற சித்தர் தினமும் காசிக்குச் சென்று கங்கை நீர் எடுத்து வந்து அபிஷேகம் செய்து வந்தார். வயது முதிர்வு காரணமாக அவரால் செல்ல முடியாதபோது, சிவபெருமான் விநாயகரை அனுப்பி காசியிலிருந்து தீர்த்தத்தைக் கொண்டு வரச் செய்தார். அந்தத் தீர்த்தமே இன்றும் அபிஷேகத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது.

காசி தீர்த்த அபிஷேகம் மற்றும் அதன் சிறப்பு: எவ்வளவு சுத்தமாக அபிஷேகம் செய்தாலும், ஒருவேளை அந்த காசித் தீர்த்தம் மூலவர் திருமேனி மீது படாமல் விடுபட்டால், உடனே சுவாமி மீது எறும்பு ஊறுவதை இன்றும் பக்தர்கள் அனுபவப்பூர்வமாக உணரலாம் என்பது இக்கோவிலின் அதிஅற்புத அதிசயமான சிறப்பம்சமாகும்.

🛕 முக்கிய சந்நிதிகள் & பரிவார சந்நிதிகள்

🐘 விநாயகர் சன்னதிகள் சிறப்பு

இக்கோவிலில் பல திசைகளிலும் தனித்துவமான பிள்ளையார் சன்னதிகள் அமையப்பெற்றுள்ளன:

1
கிழக்கு நோக்கிய பிள்ளையார் அனைத்து கோவில்களிலும் உள்ளதைப் போன்ற பிரதான விநாயகர்.
2
மேற்கு பார்த்த பிள்ளையார்கள் ஈசான மூலையில் உள்ள இப்பிள்ளையார் குழந்தை பேற்றையும் செல்வ செழிப்பையும் அருளக்கூடியவர்.
3
தெற்கு பார்த்த பிள்ளையார் அபிச்சார தோஷம் எனப்படும் பில்லி, சூனியம், ஏவல் போன்ற தீங்குகளை நிவர்த்தி செய்பவர்.
4
வடக்கு முக இரட்டைப் பிள்ளையார் & வளம்புரி விநாயகர் நமக்கு வரும் இடர்களைத் தீர்த்து, கேட்ட வரம் தரும் வளமை அளிப்பவர்.
5
காசி விநாயகர் சோமநாத ஆண்டாருக்காக காசியிலிருந்து தீர்த்தம் கொண்டுவந்து வைக்க உதவியாகக் காசித் தீர்த்த கிணற்றின் அருகே அமர்ந்தவர்.
6
அனுக்கி விநாயகர் நாம் செய்யும் எந்தக் காரியமும் தடையின்றி நிறைவேற அனுக்கிரகம் பெற தனிச் சன்னதியில் அருள்பாலிப்பவர்.

மற்றும் நிருதி மூலையில் ஆதி விநாயகர்: நிருதி லிங்கத்திற்கு அருகில் லிங்கத்தோடு இணைந்து காட்சியளிக்கிறார்.

🏛️ பிற முக்கிய சந்நிதிகள் & தனிப்பெரும் சிறப்புகள்

ஜுரஹரேஸ்வரர் (Jurahareswarar)

சுவர்களில் செதுக்கப்பட்டிருக்காமல், தனி சன்னதியாக அமைந்துள்ள இவரின் வழிபாடு சகல வியாதிகளையும் தீர்க்கும்.

கஜலட்சுமி, மகாவிஷ்ணு மற்றும் பிரத்யேக நெற்றிக்கண்

வைகுண்டத்திலிருந்து வந்து அமர்ந்த கஜலட்சுமிக்கு இத்தலத்தில் தனிச் சன்னதி உண்டு. அச்சுதனால் பூஜிக்கப்பட்டதாலேயே ஊருக்கு 'அச்சுதமங்கலம்' என்று பெயர் பெற்றது. கஜலட்சுமி சன்னதிக்கு அருகில் மகாலட்சுமியும் மகாவிஷ்ணுவும் சேர்ந்து காட்சியளிக்கின்றனர். சிவபெருமானைப் போலவே மகாலட்சுமிக்கும் இத்தலத்தில் நெற்றிக்கண் (திருநேத்திரம்) இருப்பது உலகிலேயே இங்கு மட்டுமே காணப்படக்கூடிய தனிப்பெரும் சிறப்பாகும்.

பாலமுருகன் & சோமஸ்கந்தர் குடும்ப தரிசனம்

பாலமுருகன்: வள்ளி-தேவசேனா இன்றி பாலமுருகனாக எழுந்தருளி அருள் பாலிக்கிறார்.

முழுமையான சோமஸ்கந்த அமைப்பு: பொதுவாக சுவாமி, அம்பாள், நடுவே முருகனை மட்டுமே காண முடியும். ஆனால் இத்தலத்தில் பிள்ளையார், பாலமுருகன், சுவாமி, அம்பாள், மனோன்மணி அம்பாள் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய ஐந்து பேரும் இணைந்த முழுமையான சோமஸ்கந்த தரிசனம் இங்கு சாத்தியமாகும்.

சனீஸ்வர பகவான் & இரட்டை பைரவர்கள்

சனீஸ்வரன்: அனைத்துக் சிவன் கோவில்களிலும் தெற்கு நோக்கி நேராக இருக்கும் சனீஸ்வரர், இத்தலத்தில் இறைவன் சோமநாதேஸ்வரரின் சந்நிதி நோக்கியவாறு வீற்றிருக்கிறார். "இங்கு வருபவர்களுக்கு எந்தத் தொல்லையும் தரக்கூடாது" என்ற இறைவனின் உத்தரவுப்படி இவர் சுவாமி சன்னதியைப் பார்த்தவாறே அருள் செய்கிறார்.

இரண்டு பைரவர்கள்: சேத்திர பாலபைரவர் (சற்று உயரமான வடிவில் கோவில் காவலாளி), காலபைரவர் (பால ரூபத்தில் - சிறு குழந்தையாக - சாந்தமான தோற்றத்தில்).

🌟 கோவில் கோஷ்ட மூர்த்தங்கள் மற்றும் சிறப்பம்சங்கள்

கோஷ்ட மூர்த்தங்கள்
  • திரிபுர சம்ஹார மூர்த்தி
  • தட்சிணாமூர்த்தி
  • கஜசம்ஹாரமூர்த்தி
  • ஊர்த்துவ தாண்டவமூர்த்தி
  • லிங்கோதற்பவ மூர்த்தி
  • நர்த்தன கணபதி
  • அகோரமூர்த்தி
  • அர்த்தநாரீஸ்வரர்
  • பிட்சாடனர்
  • அனுக்கிரக சண்டிகேஸ்வரர்
  • பிரம்மா
  • விஷ்ணு
  • துர்க்கை
  • நடராஜர் சுதை சிற்பம்
இதர சிறப்பம்சங்கள்
லிங்கங்கள்: நிருதி லிங்கம், பிரித்வி லிங்கம், வாயு லிங்கம் மற்றும் தல விருட்சமான ருத்ராட்ச மரம்.

அதிகார நந்தி: மாட்டுத் தலை இல்லாமல் முழுமையான மனித தேகத்துடனும் தேவர் வடிவத்துடனும் கம்பீரமாகக் காட்சியளிக்கிறார்.

துவாரபாலகர்கள்: திரிபுர சம்ஹார மூர்த்தி கோஷ்டத்தில் அசுரர்களை அழித்த தண்டி, முண்டி இருவரும் பாதுகாவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

🌟 ஏழு முக்கிய தோஷப் பரிகாரங்கள்

🌙
சந்திர தோஷம் பங்குனி பௌர்ணமி அன்று சோமன்னு சொல்லக்கூடிய சந்திரன் இந்த சுவாமியை வழிபடுவதாக ஐதீகம். அன்றைய தினம் சாயரட்சையில் சுவாமி மீது சந்திர ஒளியானது விழும்.
🐍
காலசர்ப்ப தோஷம் கோவில் பிரகாரத்தை வலம் வரும்போது சாலரத்திலேயே பின்னிட்டு இருக்கும் கால சர்ப்பங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை நாலரை முதல் ஆறு மணி வரை நெய்தீபம் ஏற்றி சுவாமி அம்பாளுக்கு அர்ச்சனை செய்தால் காலசர்ப்ப தோஷங்கள் நிவர்த்தியாகും.
கடன் மற்றும் சரும நோய்கள் ஜுரஹரேஸ்வரருக்கு தனி சன்னதி இங்கேயுள்ளது. பத்து வாரம் திங்கட்கிழமை அர்ச்சனை செய்து, 11வது திங்கட்கிழமை வெந்நீர் வைத்து அபிஷேகம் செய்து மிளகு ரசஞ்சாத நெய்வேத்தியம் செய்து கொடுத்தால் சகல வியாதிகளும் நிவர்த்தியாகும்.
💐
திருமணத் தடைகள் சுவாமி அம்பிகையோட கையைப் பிடித்து அக்னியை வலம் வந்த கோலத்தில் கல்யாணசுந்தரராக கோஷ்டத்தில் அருள்பாலிக்கிறார், இங்கு வந்து வேண்டிக்கொண்டால் திருமண தடை நீங்கும் என்பது நம்பிக்கை.
👶
குழந்தை பாக்கியம் வெள்ளிக்கிழமைகளில் அம்பாளுக்கு 9 வாரங்கள் வெள்ளரிப் பழம் வைத்து நெய்வேத்தியம் செய்து வழிபட்டு, அந்தப் பழத்தைப் பிரசாதமாக உட்கொண்டால் நிச்சயம் குழந்தை வரம் கிடைக்கும்.
🗣️
பேச்சுத் திறன் வாக்கு வன்மை பெருகவும், திக்குவாய் பிரச்சனைகள் நீங்கவும் அம்பாளுக்கு தேன் அபிஷேகம் செய்து வழிபடலாம்.
🤝
பிரிந்தவர் ஒன்று சேருதல் சுவாமி அம்பாளைப் பிரிந்து பூலோகத்தில் தவம் இருந்ததும், மகாவிஷ்ணுவும் மகாலட்சுமியும் பிரிந்து ஒன்று சேர்ந்ததும் இத்தலத்தில்தான். அதனால் இங்கு வந்து வழிபட்டால் பிரிந்தவர் ஒன்று சேருவர் என்று நம்பிக்கை.
⏰ தரிசன நேரம் & கால பூஜைகள்
🌅 காலை நேரம்
08:00 AM - 12:00 PM
🌙 மாலை நேரம்
04:00 PM - 09:00 PM

🔔 கால பூஜைகள் விவரம்

🕉️
காலசந்தி காலை 8:00 மணி
☀️
உச்சிகாலம் நண்பகல் 12:00 மணி
🪔
சாயரட்சை மாலை 6:00 மணி
அர்த்தஜாமம் இரவு 8:00 மணி

🎉 வழிபாட்டு விசேஷ காலங்கள் & விழாக்கள்

விசேஷ நாள்கள்: திங்கட்கிழமை, பிரதோஷம் மற்றும் மகாசிவராத்திரி இரண்டாம் நாள்.

ஆருத்ரா தரிசனம்: மார்கழி ஆருத்ரா தரிசனத்தன்று நடராஜர் புறப்பாடு செய்யப்பட்டு, இரண்டாம் ராஜகோபுரத்தின் அருகே தீர்த்தவாரி உற்சவம் வெகுவிமரிசையாக நடைபெறுகிறது.

🏛️ அதிகாரப்பூர்வ தொடர்பு விவரங்கள் (Contact Details)

📍 முகவரி: அருள்மிகு சோமநாதசுவாமி திருக்கோவில், அச்சுதமங்கலம், நன்னிலம் வட்டம், திருவாரூர் மாவட்டம் - 610105.

📞 தொலைபேசி எண்கள்: 7708251161, 04366 - 212365

👤 குருக்கள் தொடர்பு எண்: 70941 08404

🗺️ பயண வழிகாட்டி (Bus Routes)

📍 1. மயிலாடுதுறையிலிருந்து (From Mayiladuthurai)

மயிலாடுதுறை (Mayiladuthurai) ➜ சன்னநல்லூர் (Sannanallur) ➜ அச்சுதமங்கலம் (Achuthamangalam)

குறிப்பு / Note: அச்சுதமங்கலத்தில் இறங்கவும். (Get down at Achuthamangalam.)

📍 2. கும்பகோணத்திலிருந்து (From Kumbakonam)

கும்பகோணம் (Kumbakonam) ➜ அச்சுதமங்கலம் (Achuthamangalam)

குறிப்பு / Note: அச்சுதமங்கலத்தில் இறங்கவும். (Get down at Achuthamangalam.)

📍 3. திருவாரூரிலிருந்து (From Thiruvarur)

திருவாரூர் (Thiruvarur) ➜ அச்சுதமங்கலம் (Achuthamangalam)

குறிப்பு / Note: எளிதில் பேருந்துகள் கிடைக்கும். (Frequent buses available.)

அச்சுதமங்கலம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து வெறும் 400 மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது இந்தத் திருத்தலம்.
🛕 அருகில் அமைந்துள்ள முக்கிய கோயில்கள்

இக்கோவிலுக்கு அருகிலேயே வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாதசுவாமி திருக்கோவில் வெறும் 2.5 கி.மீ தொலைவில் உள்ளது. அருள்மிகு மங்கள நாயகி அம்மன் சமேத வாஞ்சி நாதர் திருக்கோயில் - ஆயுள் விருத்தி ஸ்தலம், தேவாரம் பாடல் பெற்ற தலம், எமபயம் நீக்கும் அற்புத தலம்.

இங்கு வந்தால் தீரும் பிரச்சனைகள் (நன்மைகள்)

  • எம பயம் & ஆயுள் தோஷம்: ஆயுள் விருத்தி அடைதல், மரண பயம் மற்றும் நோய் நொடிகள் நீங்குதல்.
  • பித்ரு தோஷ நிவர்த்தி: முன்னோர் சாபம், பித்ரு தோஷங்கள் நீங்கி குடும்பத்தில் அமைதி உண்டாதல்.
  • நவகிரக & சனி தோஷங்கள்: ஏழரை சனி, சனி தசா புத்தி பாதிப்புகள் மற்றும் ராகு-கேது தோஷங்கள் விலகுதல்.
  • மன அழுத்தம் & பதற்றம்: காரணமற்ற பயம், மனக்கவலை, மன அழுத்தம் நீங்கி மன அமைதி பெறுதல்.
  • திருமணத் தடை & குடும்ப ஒற்றுமை: திருமணத் தடைகள் விலகுதல் மற்றும் கணவன்-மனைவி இடையே ஒற்றுமை பலப்படுதல்.
  • பூர்வ ஜென்ம பாவங்கள்: பூர்வ ஜென்ம பாவங்கள் மற்றும் அறியாமல் செய்த பாவங்கள் அகலுதல்.

🔗 Click the link for full article

❓ அடிக்கடிகேட்கப்படும் கேள்விகள் (FAQ)

கேள்வி: இக்கோவிலின் மூலவர் சிறப்பு என்ன?

பதில்: சோமநாதர் சாதாரண ஆவுடையார் அல்லாமல், சதுர பீட ஆவுடையாரைக் கொண்டவராகவும், திருமேனி நீல நிற ஜொலிப்புடன் நீல லிங்கமாகவும் காட்சியளிக்கிறார்.

கேள்வி: இக்கோவிலில் துளசி அர்ச்சனை எப்போது செய்யப்படுகிறது?

பதில்: திங்கட்கிழமை, பிரதோஷம் மற்றும் மகாசிவராத்திரி இரண்டாம் நாள் ஆகிய விசேஷ நாட்களில் மட்டும் சிவபெருமானுக்குத் துளசியைக் கொண்டு அர்ச்சனை செய்யப்படுகிறது.

கேள்வி: அச்சுதமங்கலம் கோவில் எந்த ஊருக்கு அருகில் உள்ளது?

பதில்: திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம், ஸ்ரீவாஞ்சியத்திற்கு அருகில் (2.5 கி.மீ தொலைவில்) அமைந்துள்ளது.

📝 என் பயண அனுபவம்

முதலில் ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாத சுவாமியை தரிசித்துவிட்டு இந்த ஆலயத்திற்கு வந்தேன். உள்ளே நுழைந்தால் ஒரு பழைய நினைவலைபோன்ற உணர்வு (nostalgia), அந்த பழமையான ஆலயமும் அங்கு நிலவிய அமைதியும் மனதுக்குள் ஏதோ ஒரு மெல்லிய அமைதியைக் கொடுத்தது. உள்ளே சென்று பார்த்த எனக்கு ஆச்சரியம், இதுவரை நான் எங்கும் பார்த்திராத கோஷ்ட மூர்த்தங்கள், அழகாகவும் தத்ரூபமாகவும் இருந்தது. இந்த ஆலயத்தில் 5 நந்திகள் இருக்கிறது. நன்றாக வேண்டிக்கொண்டு ஆலயத்தை சுற்றி பார்த்துவிட்டு ஆலய வரலாறுகளை கேட்டு தெரிந்து கொண்டேன். அற்புதமான ஆலயம் ஆனால் மக்கள் வருவது குறைவே, காரணம் யாருக்கும் அங்கே இப்படி ஒரு கோவில் இருப்பது தெரிவதில்லை.

அங்கே ஒரு பாட்டி தள்ளாதவயதிலும் சுட்டியாக ஆலய பணிகளை செய்துகொண்டிருந்தார் புன்னகையோட, அவரிடம் என்னால் முடிந்த பணத்தை கொடுத்தேன். நீங்களும் கோவில்களுக்கு செல்லும்போது அங்கே உளமாற பணி செய்யும் வயதானவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள், புண்ணியம் சேரும் உங்கள் தலைமுறை தழைக்கும். பிறகு அங்கிருந்து பேருந்தில் கிளம்பி சன்னநல்லூர் வந்து அங்கிருந்து இன்னொரு பேருந்தில் பேராளம் சென்று அங்கே இருக்கும் சில கோவில்களுக்கு சென்றோம். அதை அடுத்த பதிவில் காண்போம்.

📸 Photos & Gallery