தற்கொலை எண்ணங்களை வெல்லும் ஆன்மீக வழிகாட்டி- ஏன் தற்கொலை செய்யக் கூடாது!

Guru
overcoming suicidal thoughts

இன்று இந்தப் பதிவை எழுதுவதற்கு ஒரு காரணம் உள்ளது


இன்று காலை நான் கண் விழித்ததும் இந்த பிரபஞ்சம் எனக்கு ஒரு சமிக்ஞையை கொடுத்தது: "ஏன் தற்கொலை செய்யக் கூடாது என்பதைப் பற்றிய விளக்கத்தை இன்று எழுது" என்று. எனக்குப் புரிந்தது, இந்தக் கட்டுரை யாரையோ காக்க வேண்டி என்று; யாருக்கோ ஏதோ ஆபத்து, இது அவர்களுக்கானது என்று. அதனால் இதைப் படிக்கும் நபர்கள் மற்றவர்களுக்குப் பகிர்வது உங்களால் ஆன பெரிய உதவியாக இருக்கும்.

முதலில் நாம் ஒரு பிறவி எடுப்பதன் பின்னணியில் என்னென்ன நடக்கிறது என்று பார்ப்போம்:

  1. ஒருவர் மனிதப் பிறவி எடுப்பதற்கே அவர் இதுவரை சேர்த்து வைத்த புண்ணியங்களில், பாதி புண்ணிய பலம் தேவைப்படுகிறது.
  2. எந்த ஒரு அங்க ஈனமும், மன ஈனமும் இல்லாமல் பிறப்பதற்கு மிச்சம் இருக்கும் பாதியில் ஒரு குறிப்பிட்ட சதவீத புண்ணியம் கழிக்கப்படுகிறது. நல்ல குடும்பத்தில் பிறப்பதற்கு ஒரு குறிப்பிட்ட பங்கு புண்ணியம், அதிலும் கடவுள் மறுப்புக் கொள்கை இல்லாத வீட்டில் பிறப்பதற்கு ஒரு குறிப்பிட்ட பங்கு புண்ணியம், வறுமை இல்லாமல் பிறப்பதற்கு ஒரு குறிப்பிட்ட பங்கு, இந்தியாவில் பிறப்பதற்கு ஒன்று, தமிழகத்தில் பிறப்பதற்கே ஒரு பெரும் பங்கு புண்ணியம் என்று நம் புண்ணியக் கணக்கில் இருந்து எடுக்கப்பட்டுத்தான் நாம் இந்தப் பிறவியை அடைகின்றோம்.

கிடைப்பதற்கரிய மானிடப் பிறவியை நாம் எவ்வளவு பொக்கிஷமாகப் பார்க்க வேண்டும்? பற்பல பிறவிகள் எடுத்து நாம் சேர்த்து வைத்த புண்ணியத்தின் பலனாகக் கிடைத்த மானிடப் பிறவியை நாமே முடித்துக் கொள்வது என்பது மன்னிக்க முடியாத பாவம். அந்த இறை என்றும் ஏற்க மாட்டார்.

எல்லோருக்கும் வாழ்வில் துன்பம் வரும் தான், துன்பம் இல்லாத வாழ்க்கை என்று எங்கும் இல்லை. ஆனால் அந்தத் துன்பம் வருவதே நாம் செய்த தீய கர்ம வினையினால் தான். அதை அனுபவித்து கழித்தால் மட்டுமே நமக்கு மோட்சம்; இல்லை என்றால் பிறப்பு இறப்புச் சக்கரத்தில்தான் உழன்று கொண்டே இருக்க வேண்டியது தான்.

முதலில் நாம் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும்: இந்த பூமி என்பது ஒரு சிறைச்சாலை போலத் தான். நாம் செய்த நல்லவை தீயவைக்கு ஏற்பத் தான் நமக்கு இங்கே வாழ்க்கை. நாம் செய்த நல் விஷயங்கள் மற்றும் தீய விஷயங்களுக்கான கர்ம பலனை அனுபவிக்கவே இந்தப் பூமியில் பிறக்கின்றோம்.

இந்த உடல் என்பது ஒரு வாகனமே; நாம் இந்தப் பூமியில் பயணிக்கப் படைக்கப்பட்டது. உள் இருக்கும் ஆன்மா அந்த இறையிடம் இருந்து பிரிந்து வந்து உடல் எனும் வாகனத்தில் ஏறி இந்தப் பூமியில் பயணிக்கிறது. வாகன ஓட்டியான ஆன்மா நல்விதமாக வாகனத்தைச் செலுத்தும்போது வாழ்க்கை எனும் பயணம் நன்றாக இருக்கும்; தவறாகச் செலுத்தும் பட்சத்தில் வாழ்க்கை துயரமாக இருக்கும்.

இதுபோல் பல பிறவிகள், பல பயணங்கள் செய்து நாம் சேர்த்து வைத்த நல்ல, தீய கர்மங்களின் பலன்களை அனுபவித்து, இந்த ஆன்மா மீது படிந்து இருக்கும் கர்ம அழுக்கைச் சுத்தம் செய்து, பரிசுத்தமாக ஆன பின்பு அந்த இறையோடு சென்று சேர்வதே மோட்சம் - பிறவி இல்லாத நிலை. அதை நோக்கி நாம் நடந்தால் நம் பாவக் கர்மங்கள் குறைய ஆரம்பிக்கும். இல்லை என்றால் இந்தப் பூமியிலேயே சுற்றித் கொண்டு இருக்க வேண்டியது தான்.


தற்கொலை செய்வதால் ஏற்படும் தீமை என்ன:

தற்கொலை செய்வதால் ஏற்படும் முதல் தீமை, அடுத்த பிறவி கிடைக்காமல் போகும். அடுத்த பிறவி கிடைக்கவில்லை என்றால் அந்த ஆன்மா இந்தப் பூமியில் நற்கதி அடையாமல் பேயாகச் சுற்றி வரும். பிறவி எனும் வரத்தை மதிக்காமல் அழித்ததற்காகக் கொடுக்கப்படும் தண்டனை இது.


தீராரத துன்பம் என்பது நாம் முன் செய்த கர்மாவின் பலனே. அதைக் கழிக்கவும், சமன் செய்யவும் ஆன்மா இந்தப் பிறவி எடுக்கிறது. அதைச் செய்யாமல் பாதியிலேயே தற்கொலை செய்வது என்பது நாமே நமது மோட்சத்திற்கான வழியை அடைத்ததாக அர்த்தம். அதன் பலன் மறுபிறவி இல்லாமல், இந்த ஆன்மா நற்கதி இல்லாமல் சுற்றுவதே.

பிறந்து விட்டோம், என்ன ஆனாலும் சரி, அதை அனுபவித்துத் தீர்ப்பதே நாம் நமக்குச் செய்யும் உண்மையான நன்மை. "தீராத துன்பத்தை எவ்வளவு நாட்கள் சகிப்பது, எவ்வளவுதான் தாங்குவது?" என்று நீங்கள் கேட்கலாம். புரிகிறது. அதற்கு ஒரே பதில் தான்: "நீ எதை விதைக்கிறாயோ அதை அறுவடை செய்கிறாய்." உன் வாழ்க்கை உன் கையில் என்பதன் அர்த்தமே, நீ செய்யும் நல்லது கெட்டதுக்கு நீதான் முழுப் பொறுப்பு என்று.

இந்தப் பிறவியில் நாம் நல்லவர்களாக இருக்கலாம், ஆனால் கடந்த பிறவிகளில் நாம் என்ன செய்தோம் என்றும் நமக்குத் தெரியாது. ஆனால் கடவுளுக்குத் தெரியும், சித்தர்களுக்குத் தெரியும். அதனால்தான் நாம் அவர்களை வணங்குகின்றோம். வெறும் 'என்று' வணங்கினால் போதாது; நாம் அவர்களின் உதவியைப் பெறத் தகுதியானவர்கள் என்று அவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். அதற்கு நம் மனம் சுத்தமாக இருக்க வேண்டும், நேர்மையான வாழ்க்கை வாழ வேண்டும், பிறருக்கு உதவி செய்ய வேண்டும், பசித்தவர்களுக்கு அன்னம் இட வேண்டும்.

வாயில்லா ஜீவராசிகளுக்குப் பசியைப் போக்க வேண்டும், அவர்களின் துயரைப் போக்க வேண்டும். எல்லா உயிர்களிடமும் அன்பு பாராட்ட வேண்டும். ஆன்ம நேயத்தோடு இருக்க வேண்டும், ஜீவகாருண்யத்தோடு செயல்பட வேண்டும். மற்றவர்களுக்காக நாம் சேவை செய்யும் போது அந்த இறைவன் நமக்காக இறங்கி வருவான், நம் கர்மவினைகளைத் தீர்த்து மோட்சத்தை அருளுவான்.

சுயநலமாக நாம் இருக்கும் வரையில் நமக்கு எந்த நற்கதியும் கிடைக்கப் போவதில்லை; மாறாகப் பிரச்சனையும் வியாதிகளும் தான் வரும். இரண்டு வகையாக நாம் நம் தீய கர்மாவை அழிக்கலாம்:

  • அனுபவித்துக் கழிப்பது.
  • தான தர்மம் பிறருக்கு உதவுவது, அனைத்து ஜீவராசிக்கும் உதவுவது. அன்னதானம் போன்ற விஷயங்களைச் செய்து புண்ணிய கர்ம கணக்கை உயர்த்த உயர்த்த, அந்த இறைவன் நம் பாவ கர்மக் கணக்கைக் குறைத்து விடுவான்.

நம் வாழ்க்கையின் விதியை முடிவு செய்வது அந்த இறைவன் தான். அதனால் அவரைச் சரணடைந்தால் தான் நமக்கு பிறவி விமோசனம். போகப் போக பாவப் புண்ணிய கர்மங்கள் போன்ற விஷயங்களை விரிவாகப் பார்ப்போம்.


தற்கொலை எண்ணத்தைத் தடுக்க:

வாழ்க்கையில் வெறுப்பாகவும் சோர்வுற்றும் இருப்பவர்கள் முதலில் செய்ய வேண்டியது அன்னதானம். இதைச் செய்யச் செய்ய உங்கள் நிலைமை மாறும், உங்களால் இயன்றதைச் செய்யலாம். "என்னிடம் காசே இல்லை" என்று கூறுபவர்கள், சிறிய கடன் வாங்கியாவது அன்னதானம் செய்ய வேண்டும். பசுமாட்டிற்கு அகத்திக் கீரை கொடுப்பது மிகுந்த புண்ணியத்தைத் தரும். உங்கள் பிரச்சனை தீர வேண்டும் என்றால் நீங்கள் புண்ணியக் காரியம் செய்துதான் ஆக வேண்டும்.

பணமில்லாதவர்கள் அருகில் உள்ள ஆலயத்தில் உழவாரப் பணி செய்யலாம், மற்றவர்களுக்கு உதவிகள் செய்யலாம், ஆலயத்திற்கு வரும் வயதானவர்களுக்கு உடன் இருந்து சாமி தரிசனம் செய்ய உதவலாம். செய்வதற்கு இந்த உலகில் நிறைய புண்ணியக் கர்மங்கள் இருக்கிறது; அனைத்திற்கும் பணம் தேவை என்று இல்லை. உங்கள் உழைப்பால் மற்றவர்களுக்கு உதவலாம். சிவனடியார்களுக்குத் தொண்டு செய்வது மிகுந்த புண்ணியத்தைத் தரும். இந்த வலைதளத்தில் வரும் அனைத்து விஷயங்களையும் மற்றவர்களுக்குப் பகிர்வது புண்ணியமே; இதைப் பார்த்துப் பலன் அடைபவர்களின் மூலம் புண்ணியம் உங்களைச் சேரும்.

அதனால் மனச்சஞ்சலத்தில் இருப்பவர்கள் முதலில் புண்ணியக் காரியம் செய்யுங்கள்; உங்கள் மனம் முதலில் அமைதியாகும், பிறகு உங்கள் வாழ்க்கை. இது உங்களின் முடிவு அல்ல, இன்னும் எவ்வவளோ இருக்கிறது அனுபவிக்க. தற்கொலை என்பது தப்பிக்கும் வழி அல்ல, அது மீள முடியாத நரகத்தில் நாமே விழுவது. புரிந்துகொள்ளுங்கள்.

மந்திரம்

தற்கொலை எண்ணம், அகால மரணம் போன்ற இறப்பைத் தடுப்பதற்கு நமக்குக் கொடுக்கப்பட்ட வரப்பிரசாதம்தான் "மகா மிருத்யுஞ்சய மந்திரம்". இதைத் தினமும் காலை, மாலை 108 முறை மனமுருக ஜபித்து புண்ணியக் காரியங்கள் தினமும் செய்ய வேண்டும்.

சிவபுராணம் தினப்பாராயணம் செய்ய எல்லாம் நன்மை தரும். தினமும் உங்கள் நிலைமை மாறும் வரை கால பைரவருக்கு விளக்கேற்றி வாருங்கள். ஆலயத்தில் ஏற்ற முடிந்தவர்கள் அங்கு செய்யலாம், செல்ல முடியாதவர்கள் வீட்டில் கால பைரவரை வேண்டி ஏற்றலாம். முடிந்தால் வீட்டில் 24 மணி நேரமும் விளக்கு எரிவது நல்லது.

உங்கள் வாழ்க்கையை மாற்றும் மகா சிவராத்திரி:

இன்று மகா சிவராத்திரி. ஈசனை நினைத்து இரவு முழுவதும் அமைதியாகத் தியானத்தில் இருங்கள். அருகில் உள்ள சிவாலயம் செல்லுங்கள். ஜீவராசிகளுக்கு உணவு கொடுங்கள். பசு மாட்டிற்கு இன்று அகத்திக் கீரை கொடுப்பது மிகுந்த பலனைத் தரும். இரவு முழுவதும் வில்வம், விபூதி இவற்றை கையில் வைத்துக் கொள்ளுங்கள். சிவபுராணம் ஓதுங்கள், பாராயணம் செய்யுங்கள். மறுநாள் இந்த வில்வத்தை மென்று தின்றுவிடுங்கள்; விபூதியை நீரில் கலந்து குடியுங்கள். இவை அரும் மருந்தாகச் செயல்படும், உங்கள் வியாதிகள் போகும் என்றும் அகத்தியர் பெருமான் சமீபத்தில் ஜீவ நாடியில் உரைத்தது.

பித்ரு கடன்:

நாளை அமாவாசை; பித்ருக்களுக்குத் தர்ப்பணம் கொடுக்கத் தவறாதீர்கள். உங்களுக்கு மலை போல் வந்த துன்பம் பனி போல் பறந்து விடும்.

உங்களை அந்த ஈசனும் சித்தர்களும் காக்கட்டும்.
எந்த ஒரு தானம் • தர்மம் • சேவையையும், அதன் பலனை எதிர்பார்த்துச் செய்யக் கூடாது.. பலனைப் பாராமல் புண்ணியக் காரியங்களைச் செய்யுங்கள் இறைவன் பார்த்துக் கொள்வான்.
ஓம் நமசிவாய!

மஹா மிருத்யுஞ்சய மந்திரம்

மஹா மிருத்யுஞ்சய மந்திரம் (Maha Mrityunjaya Mantra) சிவபெருமானை போற்றும் மிக சக்திவாய்ந்த ரிக்வேத மந்திரமாகும். இது அகால மரணத்தைத் தடுத்து, நோய்களைக் குணப்படுத்தி, நீண்ட ஆயுளையும், ஆன்மீக பலத்தையும் அருளக்கூடியது.

மிருத்யுஞ்சய மந்திரம் (சமஸ்கிருதத்தில்):

ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम्।
उर्वारुकमिव बन्धनान्मृत्योर्मुक्षीय मामृतात्।।

தமிழ் உச்சரிப்பு:

ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம் |
உர்வாருகமிவ பந்தனான்-ம்ருத்யோர் முக்ஷீய மாம்ரிதாத் ||

மந்திரத்தின் பொருள்:

  • த்ரயம்பகம்: முக்கண் உடைய சிவபெருமானே
  • யஜாமஹே: நாம் வணங்குகிறோம்
  • ஸுகந்திம்: நறுமணம் மிக்கவர்
  • புஷ்டிவர்த்தனம்: உலகைப் படைத்து காப்பவர்
  • உர்வாருகமிவ: வெள்ளரிக்காய் போல
  • பந்தனான்: அதன் காம்பிலிருந்து
  • ம்ருத்யோர்: மரணத்திலிருந்து
  • முக்ஷீய: விடுவிக்க
  • மாம்ரிதாத்: அழியாத தன்மையை நோக்கி.

சுருக்கமான பொருள்: நறுமணம் மிக்கவரும், உலகைக் காப்பவருமான முக்கண் சிவனை வணங்குகிறோம். பழுத்த வெள்ளரிக்காய் அதன் காம்பிலிருந்து எளிதாக விடுபடுவது போல, எங்களை மரண பயத்திலிருந்தும் விடுவித்து, மோட்சத்தை அருள வேண்டுகிறோம்.

மந்திரத்தின் பலன்கள்:

  • அகால மரண பயம் நீங்கும்.
  • நீண்டகால நோய்கள் குணமடைய உதவும்.
  • நேர்மறை ஆற்றல் பெருகும்; அச்சம் நீங்கும்.

ஜபிக்க வேண்டிய முறை:

காலை, மாலை 108 முறை; பிரம்ம முகூர்த்த நேரம் மிகவும் சிறந்தது.


⚠️ நிபுணர் ஆலோசனை (Disclaimer)

இது ஒரு விழிப்புணர்வுப் பதிவு மட்டுமே. மருத்துவ சிகிச்சையுடன் சேர்த்து ஆன்மீகத் தேடல் என்பது ஒருவருக்கு ஆழ்ந்த மன வலிமையையும், அமைதியையும் தரும். இருப்பினும், மன அழுத்தம் அல்லது தற்கொலை எண்ணங்களால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக தகுந்த மருத்துவர் அல்லது தற்கொலை தடுப்பு உதவி மையங்களை அணுகுவது அவசியமாகும்.

உதவி எண்கள் (Helpline Numbers):

உங்களுக்கு அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு உதவி தேவைப்பட்டால், கீழ்க்கண்ட எண்களைத் தொடர்பு கொள்ளவும்:

  • 📞 சினேகா (Sneha) தற்கொலை தடுப்பு மையம்: 044-24640050 (24 மணிநேர சேவை)
  • 📞 தமிழக அரசின் உதவி எண்: 104
  • 📞 நிம்மதி (Nimmathi) हेल्पलाइन: 044-25232323

"உயிர் விலைமதிப்பற்றது. இருளைக் கடக்க எப்போதும் ஒரு வழி உண்டு, இறையின் ஒளி உண்டு."

Keywords: தற்கொலை தடுப்பு | மன அழுத்தம் | ஆன்மீக தீர்வுகள் | மன அமைதி | கர்ம வினை பலன்கள் | மோட்சம் அடைவது எப்படி | மகா மிருத்யுஞ்சய மந்திரம் பலன்கள் | பிறவியின் நோக்கம் | சித்தர்கள் வாக்கு | Suicide Prevention | Spiritual Healing | Karma | Mental Wellness | Overcoming Depression | Purpose of Life | Rebirth.
Hashtags: #Hope #Life #Spirituality #Tamil #Motivation #MentalHealthAwareness #TamilSpirituality #LifeIsPrecious #Karma #MantraHealing #SuicidePrevention #TamilMotivation #நம்பிக்கை #ஆன்மீகம் #வாழ்க்கை #MahaMrityunjayaMantra

அடுத்த கட்டத்தைப் பற்றி குழப்பமா?

தெளிவு பெற எமது ஆன்மீகக் கருவிகளைப் பயன்படுத்துங்கள்:

தொடர்புடைய ஆன்மீகக் கட்டுரைகள்:

வாழ்க்கையின் மற்ற சிக்கல்களைத் தீர்க்கும் சக்திவாய்ந்த தலங்கள்: